×

வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பாளர்களின் செலவு விவரம் ஈடி, ஐடி அதிகாரிகள் கண்காணிப்பு: மாநில செலவின பார்வையாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மாநில செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரி நேற்று சென்னையில் அமலாக்கத்துறை, வருமானவரி துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வேட்பாளர்களின் செலவுகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான பணிகளில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு தலைமையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்கள் போட்டியிடும் சின்னங்கள் அச்சிடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஓட்டும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் பண நடமாட்டத்தை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை சுமார் ரூ.112 ேகாடி மதிப்புள்ள பணம், நகை மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வாகனங்களையும் பறக்கும் படையினர் மறித்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்க ஒவ்வொரு தொகுதிக்கும் ஒன்று அல்லது இரண்டு அதிகாரிகள் என்ற அடிப்படையில் 58 ஐஆர்எஸ் (வருமான வரித்துறை) அதிகாரிகள் வெளிமாநிலத்தில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகளையும் கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையம் மாநில செலவின பார்வையாளராக கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பி.ஆர்.பாலகிருஷ்ணனை நேற்று முன்தினம் நியமித்தது. அதைத்தொடர்ந்து அவர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் நேற்று காலை 11 மணி மற்றும் மாலை 3 மணியளவில் சென்னை, தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை, ஜிஎஸ்டி, சுங்கம் மற்றும் கலால்வரி, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்பினருடன் நாடாளுமன்ற தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உடன் இருந்தார். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாட்கள் மட்டுமே உள்ளது. வேட்பாளர்களது செலவு கணக்கை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதே நேரம் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுக்க முயற்சி செய்யலாம். அதனால் அவர்களின் வங்கி கணக்கு மற்றும் பல்வேறு வழிகளில் அவர்களுக்கு வரும் பண நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து உடனுக்குடன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுப்பதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு மாநில செலவின பார்வையாளர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து மாநில தலைமை செயலாளர், டிஜிபிக்களிடம் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க கெடுபிடிகளை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது.

இதனால், வேட்பாளர்களும் தேர்தல் ஆணையம் வீசும் வலையில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறும்போது, ‘‘வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை இந்திய தேர்தல் ஆணையம் தடுப்பது சிறப்பான நடவடிக்கைதான். அதேநேரம், எதிர்க்கட்சிகளை குறிவைத்தே ஒன்றிய அரசின் அதிகாரிகள் செயல்படுவதுதான் தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.

* இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று அனைத்து மாநில தலைமை செயலாளர், டிஜிபிக்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.

* அதிரடி நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க கெடுபிடிகளை அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது.

The post வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாள் மட்டுமே உள்ள நிலையில் வேட்பாளர்களின் செலவு விவரம் ஈடி, ஐடி அதிகாரிகள் கண்காணிப்பு: மாநில செலவின பார்வையாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ED ,CHENNAI ,Tamil Nadu ,IRS ,State Expenditure ,Enforcement Department ,Income Tax Department ,Dinakaran ,
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...